பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
ஊட்டி:ஊட்டி அடுத்துள்ள காந்தளில், பகவதி அம்மன் தெருவில், அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டன.
கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் (பிப்., 14ல்), காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கின. அதில், சிறப்பு யாகம்; ஹோமம், திருவிளக்கு பூஜை, அம்மன் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. நேற்று (பிப்., 15ல்), காலை, 7:30 மணிக்கு முதல், 8:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதில், நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் சத்தியபாமா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, பகல், 11:00 மணி முதல், மாலை, 4:00 மணிவரை அன்னதானம் நடந்தது.மாலை, 5:00 மணிக்கு பகவதி அம்மன் திருவீதி உலா துவங்கி, இரவு முடிந்தது. தொடர்ந்து, இன்று (பிப்., 16ல்) முதல், 48 நாட்களுக்கு நாள்தோறும் மண்டல பூஜை நடக்கிறது.