பதிவு செய்த நாள்
19
பிப்
2019
12:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று காலை நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த,13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி இரவு பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர். நேற்று காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து மூலவருக்கு திருமஞ்சணம் பூஜை செய்யப்பட்டது. பின்பு திருமணக் கோலத்தில் உச்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மண்டபத்துக்கு எழுந்தருளினார். அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன.புண்ணிய வாகம் முடிந்த பின், அரங்கநாதப் பெருமாளுக்கு பூணுால் அணிவித்து, கங்கணம் கட்டி, குலம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச பட்டர் ஆகியோர் மஞ்சள் இடித்து, மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர்.
அரங்கநாதப் பெருமாளின் சார்பாக அர்ச்சகர்கள் திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவிக்கு அணிவித்தனர். பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில், மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. இன்று அதிகாலை, 5:30 மணிக்கு அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மதியம், 2:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் விமலா, செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
போக்குவரத்தில் மாற்றம்: தேரோட்டத்தை முன்னிட்டு, காரமடையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், குட்டையூர் அடுத்த காந்திநகரில் இருந்து தொட்டிபாளையம் வழியாக கோவை மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும். கோவையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், சின்னமத்தம்பாளையம் பிரிவிலிருந்து கன்னார்பாளையம், அன்னுார் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.