பதிவு செய்த நாள்
19
பிப்
2019
12:02
திருப்பூர்: மாசி மாத, வளர்பிறை சதுர்த்தசி நாளான நேற்று, சிவாலயங்களில் உள்ள, நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிவாலயங்களில் இருக்கும், ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மன் உற்சவருக்கு, ஆண்டுக்கு ஆறு முறை மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது.
சித்திரை - திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி -திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்கள், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய வளர்பிறை சதுர்த்தசி திதிகளில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாத, வளர்பிறை சதுர்த்தசி நாளான நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சார்யார்கள், 32 வகையான திரவியங்களால், ஸ்ரீ நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, வில்வமாலை, தாமரை மாலை அணிந்து, தங்க சப்பரத்தில் அம்மையப்பர் அருள்பாலித்தனர். அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், திருவாசகம் முற்றோதல் நடத்தி, சிவபூஜையில் வழிபட்டனர். வழிபாட்டில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று நடராஜ பெருமானை வழிபட்டனர்.