திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ பெருவிழா, திருக்கல்யாண வைபவத்துடன் நேற்று நிறைவடைந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 16ம் தேதி தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. 19ம் தேதி மாசி மக தெப்பத் திருவிழா நடந்தது.நேற்று முன்தினம், திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், வள்ளி சிறைபிடிப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு கந்தபெருமான் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.ஏராளமானோர் சீர்வரிசைகளுடன் உற்சவ மண்டபத்தில் குவிந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்திற்கு பின் வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிரம்மோற்சவத்தை ஒட்டி, கந்த பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.தொடர்ந்து கேரளா, கோழிக்கோடு திருப்பழனி தைப்பூச அன்னதான சங்கத்தினர், 1,000 பேருக்கு கல்யாண விருந்து அளித்தனர்.