ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.
ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் எனவும் புகழ் அல்லது பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீராகில் நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டலாமே.
கடிசேர்ந்த போதுமலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால் கொண்டு அங்க ஆட்டிட தாதைபண்டு முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டும் அன்றே.
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப் பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.
பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப் பேராழி ஆனது இடர்கண்டு அருள்செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்ச இடம் கொண்டவர்க்குப் போராழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே.
மால் ஆயவனும் மறை வல்ல நான்முகனும் பாலாய தேவர் பகரில் அமுதூட்டல் பேணி காலாய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள்செய்ததாமே.
அற்று அன்றி அம்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் தெற்று என்று தெய்வம் தெளியார், கரைக்கு ஓலை தெண்நீர்ப் பற்றுஇன்றிப் பாங்கு எதிர்பின் ஊரவும் பண்பு நோக்கில் பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே.
நல்லவர்கள் சேர்புகலி ஞானசம்பந்தன் நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோர் உலகு ஆளவும் வல்லரன்றே.