காட்டழகிய சிங்கர் கோவில் ஜேஷ்டாபிஷேகம்; வடகாவிரியில் இருந்து புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 11:07
திருச்சி; ஸ்ரீரங்கம்அரங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவில் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு புனித வடகாவிரி நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலாக திகழ்கிறது காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில். கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள். தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அழகியசிங்கரை வழிபட்டால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதி காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவுக்கு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால், தவத்துக்கு ஏற்ற தலமாக இதனை மாற்றித்தரும்படி ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். ரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், பெருமாளே தனக்காக ஒரு கோயில் அமைத்து, அதனை தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோயில்களின் எல்லை தெய்வமாகவும் இந்தப் பெருமாள் விளங்கி வருகிறார். சிறப்பு மிக்க இத்தலத்தில் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு புனித வடகாவிரி நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.