மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை
பதிவு செய்த நாள்
25
ஜூலை 2025 03:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை பூஜை நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு இக்கோவிலின், 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இன்று காலை லட்சார்ச்சனை பூஜை நடந்தது. முன்னதாக அம்மன் சுவாமியை அலங்காரம் செய்து வைத்தனர். அம்மன் சுவாமி முன், மூலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். அதன் பிறகு சிவ பக்தர்கள், மகளிர் ஆகியோர் பங்கேற்று லட்சம் அர்ச்சனை செய்தனர். 26ல் கிராம சாந்தி பூஜையும், 27ம் தேதி கொடியேற்றமும், சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது. 28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 30ம் தேதி மாவிளக்கு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி பரிவேட்டை மற்றும் வானவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 4ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, தக்கார் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.
|