ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பிறகு பிரசாதமாக தரப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, நீராடி, துாய்மையான ஆடை உடுத்தி சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து செம்பருத்தி பூ, செவ்வரளிப்பூ படைத்து, வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஆடி வெள்ளியான இன்று, அம்பாளுக்கு பூஜையறையில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயாசம் படைத்து வழிபட எல்லா நலன்களும் உண்டாகும். ஆடி மாதம் அம்மன் மட்டுமின்றி சிவன், மகாலட்சுமி, முருகன், விநாயகர், குல தெய்வம், கிராம காவல் தெய்வம் என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும் ஏற்ற மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே சிறப்பு வாய்ந்தவை தான். கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுவது ஆடி மாதத்தில் தான். ஆடி வெள்ளியில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கும்.