பதிவு செய்த நாள்
02
மார்
2019
11:03
பெரியகுளம்: கோயிலில் பிரார்த்தனையின் போது மட்டுமே மனிதனின் சிந்தனையும், மனமும் ஒரே நேர்கோட்டில் நீண்ட நேரம் பயணிக்கும் என்பது உண்மையிலும் உண்மை. இறைவனை வணங்கும் போது அமைதி மனதை வருடிவிட்டு செல்லும். இதை உணர்ந்தவர்கள் பலர். கண்களை மூடி சிறிது நேரம் உட்காரும் போது, கோயிலில் அர்ச்சகர் கூறும் மந்திரம், மணி ஓசை, அங்குள்ள துாண்களில் அழகிய ஓவியம் இன்னும் பட்டியல் நீளும்.
இதன் வரிசையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் நுாற்றாண்டு பழமையானது. உத்திரப்பிரதேசம் மாநிலம் காசிக்கு அடுத்தபடியாக, இக்கோயில் அருகே செல்லும் வராகநதி கரையோர இருபுறங்களிலும் ஆண், பெண் மருதமரம் அமைந்திருப்பது சிறப்பம்சம். கடந்தாண்டு 72 அடி உயரத்துடன் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு புதிதாக மூன்று கொடிமரம் பிரதிஷ்டையானது. மூன்று மூலவர்களுக்கு தனித்தனி சன்னதி உண்டு. கன்னிமூல கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணியர் உட்பட 157 பரிகார தெய்வங்கள் உள்ளன. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பங்குனி உத்திர தேர்திருவிழா உட்பட 5 வகையான முக்கிய திருவிழாக்களும், மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடக்கும்.
நுழைவுப்பகுதியில் 20 அடி ராஜகோபுர வலது புறம் கதவில், மரத்திலான சுவாமி சிற்பங்களான, சந்திரசேகர மூர்த்தி, தருண கணபதி, பாலகணபதி, சக்தி கணபதி, மயில்வாகனம், தேவசேனாதிபதி, கந்தர், பிரம்மா, சோமாஸ்கந்தர், நடராஜர், சரபேஸ்வரர், லட்சுமிநரசிம்மர் உள்ளிட்ட 32 சுவாமிகளும் மற்றும் இடது புறக்கதவில் மீனாட்சி உட்பட 31 தெய்வங்கள் அழகாக, பொன்னமராவதியைச் சேர்ந்த சேது ஸ்தபதி வடிவமைத்துள்ளார். இந்த இருகதவுகளையும் பக்தர்கள் ‘வைத்த கண் வாங்காமல்’ பார்த்து பிரமித்து போகின்றனர் என்பது கண்கூடு. காலை 6:00 மணி முதல் பகல் 12:00 வரை, மாலை 5:00 மணி முதல் 8:00 வரைக்கும் நடை திறந்து இருக்கும். அர்ச்சகர்கள் கார்த்தி, தினேஷ் பூஜைகள் செய்து வருகின்றனர்.