பதிவு செய்த நாள்
05
மார்
2019
03:03
மடத்துக்குளம்: நூற்றாண்டு பழமை வாய்ந்த கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் மகா சிவராத்திரி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில், கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் முக்கியமானது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பூஜைகள் நடக்கிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று (மார்ச்., 4ல்) இரவு 6:00 மணிக்கு தொடங்கி, இன்று (மார்ச்., 5ல்) காலை 6:00 மணிவரை, நான்கு காலம் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கிறது.
முதல் கால பூஜையில் விநாயகருக்கு பஞ்ச காவ்ய அபிஷேகம்ம் செய்து, செந்நிறப்பட்டு, வில்வமாலை, சந்தனகாப்பு அலங்காரமும், இரண்டாம் கால பூஜை (இரவு 9:00 மணி தொடங்கி 12:00 மணிவரை) யில் சுப்பிரமணியருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், செய்து வெண் மஞ்சள் பட்டு, தாமரைப்பூ மாலை, அகில்காப்பு அலங்காரமும் நடந்தது.மூன்றாம் கால பூஜையில் (இரவு 12:00 மணி தொடங்கி, அதிகாலை 3:00 மணிவரை) திருமால், பிரம்மாவுக்கு கொம்புதேன் அபிஷேகம் செய்து, வெண் பட்டு, ஜாதிப்பூ மாலை அணிவித்து, பச்சைக்கற்பூரம் காப்பும், நான்காவது கால பூஜையில்( அதிகாலை 3:00 மணிதொடங்கி காலை 6:00 மணிவரை ) இந்திரன், ரிஷிகள், கணங்களுக்கு கரும்புச்சாறு அபிஷேகம், செய்து, பின் பச்சைபட்டு, நந்தியாவட்டை பூ மாலை, ஜவ்வாதுகாப்பு, நடைபெற்றது.
இந்த விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.