பதிவு செய்த நாள்
07
மார்
2019
11:03
கோவை: கோனியம்மன் கோவில் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில், பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. திரளான பக்தர்கள், ‘ ஓம்காளி ஜெய்காளி ’ கோஷம் முழங்க அம்மனை தரிசித்தனர்.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேர்த்திருவிழா, பிப்., 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. பிப்., 26ல்கொடியேற்றமும்., 27 முதல் மார்ச் 4ம் தேதி வரை அம்மன், புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில், நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு வழிபாடு, பக்தி இன்னிசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்ச் 5ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பகல் 2:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடந்தது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உட்பட, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்வடம் பிடித்து இழுத்து துவக்கினர். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக சென்று, மீண்டும் தேர்நிலைத்திடல் அடைந்தது. வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், பூரணகும்ப மரியாதை செய்து, மங்கள பொருட்களை சமர்பித்து வழிபட்டனர். இளைஞர்கள் ‘ஓம்காளி ஜெய்காளி’ என்று கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர். இன்று மாலை, அம்மன், குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார். நாளை தெப்பத்திருவிழாவும், இந்திர விமானத்தில், அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 9ல் யாளி வாகனத்தில், அம்மன் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. மார்ச், 11ல் வசந்த விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.