பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
சூலூர்:முத்துக்கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவில், காளியாபுரம், ராசிபாளையம், அருகம்பாளையம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது.
இங்கு சிவன் ராத்திரியை ஒட்டி நடக்கும் குண்டம் மற்றும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் (மார்ச்., 5ல்) அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பள்ளைய பூஜை மற்றும் குண்டத்துக்கு பூவிட்டு பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளி, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.இதேபோல், சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில், அரசூர் பரமசிவன் கோவில், செலம்பராயம்பாளையம் அழகீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சூலூர் மற்றும் பள்ளபாளையம் சிவன் கோவிலில் சிவன்ராத்திரியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.