நாகர்கோவில்: மார்ச் 8 பங்குனி உத்திர திருவிழா மற்றும் மாத பூஜைகளுக்காக சபரி மலை நடை மார்ச் 11ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று கோயிலுக்கு புதிய தங்க கதவு அமைக்கப்படுகிறது. 12 ம் தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக மார்ச் 11 ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்வார். கோயிலில் தற்போதுள்ள முன்வாசல் பழுதானதை தொடர்ந்து புதிய கதவு அமைக்கும் பணி டிசம்பரில் தொடங்கியது. தற்போது அதற்கு தங்க தகடு பொருத்தும் பணி நடக்கிறது. இந்த பணி முடிவடைந்து 11ம் தேதி சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின் புதிய கதவு பொருத்தப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் நடைபெறும் கொடியேற்றத்திற்கான சுத்திகலச பூஜைகள் நடைபெறும்.
12ம் தேதி காலை 7:30 முதல் 8:20 மணிக்குள் தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுகிறார். ஒன்றாம் திருவிழா முதல் 20 ம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு ஸ்ரீபதபலி, 13ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை மதியம் உற்ஸவபலியும், 16ம் தேதி ஐந்தாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை இரவு யானை மீது சுவாமி எழுந்தருளலும் நடக்கிறது. 21ம் தேதி காலையில் உஷபூஜைக்கு பின்னர் சுவாமி பம்பைக்கு ஆராட்டுக்காக எழுந்தருளுவார். மதியம் பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.