திருக்கனுார்: கொடுக்கூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. 4ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குட அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா, 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாள கண்டன் கோட்டையை அழித்தல், இரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு அம்மன் வீதியுலாவாக, மயானத்திற்கு சென்று மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. கொடுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பணம், உணவுப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை இரைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.