பதிவு செய்த நாள்
01
மார்
2012
04:03
கல்யாணத்தை பொருளாதாரப் பிரச்னை ஆகப் பண்ணியிருப்பது அக்கிரமம். இவ்விடத்தில் அக்கிரமம் என்ற வார்த்தையைத் தான் (அழுத்தி) சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு, பெண்ணோடு பிறந்தவர்கள் தானே? நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், வரதட்சணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு என்று கண்டிஷன் போட்டு, பெண் குழந்தைகளைக் கல்யாணமாகாமல், கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதுக்கே இல்லை. பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா? நம் அகத்தை(வீட்டை) விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்த குழந்தை வர வேண்டும் என்று சந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல், கல்யாணம் பண்ணிக் கொள்கிற நல்ல மனசு நம் ஜனங்களுக்கு வரவேண்டும். இதில்ஸ்திரீகளின்(பெண்களின்) பங்கு விசேஷமானது. பெண்ணாகப் பிறந்தவர்களுக்குத் தான், தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும், அனுதாபமும் இருக்க வேண்டும். நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று வந்ததால், வாங்கிக் கொண்டோம் என்று சொல்வது கூட தப்பு தான். வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
-கொதிக்கிறார் காஞ்சிப்பெரியவர்