பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
அந்தியூர்: பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, சிற்ப வேலைப்பாடுடன் புதிதாக செய்யப்பட்ட தேர், கடந்த ஒரு வருடமாக, சக்கரம் பொருத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சித்திரை தோரோட்டம் நடக்குமா என, பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை தேர்த்திருவிழா, நடக்கும். பழைய தேர் சேதமானதால், தேரோட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த கலைஞர்கள், சிற்ப வேலைப்பாடுடைய தேரை, செய்தனர். அதன் பின், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள், ஆய்வு செய்தனர். அப்?போது புதிய தேர், அளவிலும், எடையிலும் அதிகமாக இருந்தது. எனவே, பழைய தேரின் சக்கரங்களை, புதிய தேரில் பொருத்த, சரிவராது என்பதால், அது கைவிடப்பட்டது. புதிய தேருக்கு பொருத்த, சக்கரம் ஒவ்வொன்றும், ஆறரை அடி அகலம் இருக்க வேண்டும் என, அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, திருச்சி பெல் நிறுவனத்துக்கு, ஐந்து லட்சம் மதிப்பில், ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டது. தற்போது, அந்த ஆணை, இந்து அறநிலையத் துறையிடம் உள்ளது. அறநிலையத்துறையிடம் இருந்து, ஆணை வந்த பிறகு, விரைவில், சக்கரம் தயாராகி விடும். கடந்த ஆண்டு, தேர் பணிகள் முடிந்தும், தேரோட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டு, சித்திரை மாதத்துக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதற்குள், புதிய தேரில், சக்கரம் பொருத்தி, வெள்ளோட்டம் விட்டு, விரைவில், தேரோட்டம் நடக்க, அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என, பக்தர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.