பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, பங்குனி உத்திர விழாவுக்கு, இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புதிய உற்சவர் சிலை செய்ததில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் முருகேசன் உட்பட, ஒன்பது பேர் மீது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிலை மோசடி என்பதால், புதிய உற்சவர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அங்கு பாதுகாப்பாக உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு பங்குனி உத்திர உற்சவத்திற்கு எந்த சிலையை பயன்படுத்துவது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த விவகாரத்தில், இன்று, தங்கள் முடிவை தெரிவிப்பதாக நீதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.ஆனால் இன்று, பங்குனி உத்திர பெருவிழாவிற்கு கொடியேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், பக்தர்கள், உபயதாரர்கள், கோவிலில் நேற்று, தர்ணா நடத்தினர். கோவில் நிர்வாகத்திடமும், பக்தர்களிடமும், சிவகாஞ்சி போலீசார் பேச்சு நடத்தினர்.மதியம் வரை நடைபெற்ற தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, இன்று கொடியேற்றம் நடத்த, கோவில் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.மேலும், கோவில் வளாகத்திற்கு வெளியே செல்லாமல், கோவிலுக்குள்ளேயே தொன்மையான உற்சவர் வலம் வருவார் எனவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மதியம், நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து, எந்த சிலை, உற்சவத்திற்கு பயன்படுத்தப்படும் என்பது தெரியவரும்.