திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தானிப்பட்டியில் ஆண்கள் மட்டுமே நள்ளிரவில் பங்கேற்ற திருவிழா நடந்தது. தானிப்பட்டி சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் பல தலைமுறைகளாக ஒரு பங்காளிகள் பிரிவினர் இவ்விழாவை நடத்தி வருகின்றனர்.
சிவராத்திரி முடிந்து எட்டாம் நாளன்று நடைபெறும் இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இடி விழுந்த மரம் தளைத்தது இல்லை. ஆனால் இங்குள்ள பனைமரம் இடி விழுந்த நிலையிலும் இன்று வரை செழிப்பாக உள்ளதால் சுவாமியின் அருள் என்ற நம்பிக்கையில் பனைமரத்தின் நிழலில் கருப்பர் காட்சி தருகிறார் என்று நம்பிக்கையோடு வழிபட்டு வருகின்றனர். இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோயில், மரமே தலவிருட்சம் என்ற அடிப்படையோடு வணங்கி வந்தனர். தற்போது சின்ன கோவிலை கட்டியுள்ளனர். விழாவன்று நள்ளிரவில் ஏராளமான ஆண்கள் கூடி கருப்பருக்கு தீபாராதனை காட்டி, கிடா வெட்டி, சாமியாடி, படையலிட்டு வணங்குகின்றனர். முன்பு பனை ஓலையை வெட்டி அதை மடித்து அதில் தான் படையலிட்டு அன்னதானம் நடத்தினர். தற்போதும் பாரம்பரியம் மாறாமல் வாழைமட்டை தட்டை பயன்படுத்தி வருகின்றனர்.