பதிவு செய்த நாள்
14
மார்
2019
02:03
சென்னை:பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவிலின், பங்குனி மாதப் பெருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று (மார்ச்., 13ல்), உற்சவர் சந்திரசேகரர், அதிகார நந்தி வாகனத்தில், மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவான்மியூரில் அமைந்துள்ளது, திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.இக்கோவிலின் பங்குனிப் பெருவிழா, மார்ச் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின், மூன்றாம் நாளான நேற்று (மார்ச்., 13ல்), காலை, 6:00 மணிக்கு உற்சவர் சந்திர சேகரர், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார்.மாட வீதிகளை வலம் வந்து, பக்தர் களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று (மார்ச்., 13ல்) இரவு, 8:30 மணிக்கு, சந்திரசேகரர் பூத வாகனத்தில், சந்திரனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, தியாகராஜர் மூன்றாம் திருபவனி, பார்த்தசாரதிக்கு அருளல் வைபவமும் அரங்கேறியது.