பதிவு செய்த நாள்
18
மார்
2019
12:03
நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 குடம் பாலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் நகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிறு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கும். அதன்படி, நேற்று பங்குனி முதல் ஞாயிறை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், 1,008 குடம் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
* குமாரபாளையம், லட்சுமி நாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின், துளசி மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களின் சிறப்பு பக்தி பாடல் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதே போல், ராமர், பாண்டுரங்கர், கள்ளிபாளையம் அனுமன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.