பதிவு செய்த நாள்
20
மார்
2019
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலை தொடர்ந்து, குமரகோட்டத்திலும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த, கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து
கோவில்களிலும், தீ தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன், கச்சபேஸ்வரர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், தீபங்களை ஆங்காங்கே ஏற்றாமல் இருக்க, அகண்டதீபம் அமைக்கப் பட்டுள்ளது. பரிகார ஸ்தலமான வழக்கறுத்தீஸ்வரர் கோவிலிலும், தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக, நெய் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு அகண்ட தீபம் வைக்கப்பட்டது. இதனால், திங்கட்கிழமைதோறும் பரிகாரத்திற்காக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், அகண்டத்தில் நெய் ஊற்றினால், பரிகாரம் நிறைவு பெறாது. தனியாக நெய்தீபத்தில், எங்கள் கைப்பட விளக்கு ஏற்றினால் மட்டுமே, பரிகாரம் நிறைவேறும் என, கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டதோடு, சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு மாதமாக, நெய் தீபம் ஏற்றுவதற்கு என, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு, தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், பரிகார ஸ்தலமான வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், தீபம் ஏற்ற அனுமதித்தைப் போன்று, வழிபாட்டு ஸ்தலமான குமரகோட்டத்திலும், பாதுகாப்பு அம்சங்கள் அமைத்து, தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.