பதிவு செய்த நாள்
20
மார்
2019
12:03
காரைக்குடி: மகான்கள் ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு இறைப்பெயரை சூட்டினர். அதன்படி உடலில் ஏற்படும் வெம்மையை போக்கும் சக்தியை, மாரியம்மன் என அழைத்தனர்.
மழை தருவதால் இந்த அம்மனுக்கு மாரி (மழை) எனவும் பெயர் ஏற்பட்டது. செட்டிநாடு சீமையில் அருளாட்சி புரியும் காரைக்குடி மீனாட்சிபுரம் மாரியம்மன், சகல வல்லமையும் அருளும் சக்தியாக வீற்றிருக்கிறாள். இவளை நம்பி வந்தோருக்கு எக்காலமும் துன்பம்
இல்லை.
சிறுமியாய் வந்தாள்1956-ல் நவம்பர் 8-ம் நாளில் லலிதா என்ற பெயருடன் 8-வயது சிறுமி மீனாட்சிபுரத்திற்கு வந்தாள். அவளது மேனி முழுவதும் அம்மை பரவியிருந்தது. இச்சிறுமிக்கு தான்தோன்றி பெருமாள் என்பவர் அடைக்கலம் கொடுத்தார். சில நாட்களில் இச்சிறுமியின் வார்த்தைகள் அருள் வாக்காக மாறின.அருள்வாக்கால் பல அதிசயங்களை நிகழ்த்திய தெய்வ சிறுமி பற்றிய பேச்சு உயிர் மூச்சாய் பரவியது. தெய்வ சிறுமி ஒரு நாள் தன்னை சுற்றி இருப்போரிடம், நான் மகமாயியாக மாறி என் ஆலயம் வரும் அனைவருக்கும் அருள் பாலிக்க போகிறேன். நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடுங்கள் என சொல்லி தற்சமயம் ஆலயம் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினாள். என்னை வழிபடுவோருக்கு நோய்கள் தீரும். மன மகிழ்ச்சி கூடும். சகல
சம்பந்துகளும் பெருகும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பேறு கிட்டும். காளையருக்கு வேலை வரும்.
மொத்தமாய் சொன்னால் ஐஸ்வரிய நலன் தேடி வந்து மகிழ்வூட்டும், என சொல்லி முக்தி அடைந்தாள். அன்று முதலே லலிதாம்பிகை அன்னை முத்துமாரியாய் அவதரித்தாள்.நின்ற
அம்மன்கர்ப்ப கிரகத்தில் முத்துமாரியம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது, அம்மன் சிரசு அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் திருஉருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தை அடுத்து கொடி மரம் அமைந்துள்ளது. முத்துமாரியம்மன் உற்ஸவம் விக்கிர பாதுகாப்பின் பொருட்டு கர்ப்ப கிரகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.மாசி - பங்குனி பெருவிழா: இத்திருக்கோயிலின் முக்கியமான விழா மாசி - பங்குனி விழாவாகும். மாசி மாத கடைசி செவ்வாய் கிழமையில் அம்பாளுக்கு காப்பு கட்டி தொடங்கும். பங்குனி முதல் செவ்வாயில் எட்டாம் நாளில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது, முளைப்பாரி, கரகம், அக்னி சட்டி எடுத்தல், 9-ம் நாளில் பால்குடம், பூக்குழி இறங்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பால்குடங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது என சொல்லலாம். ஆயிரக்கணக்காய் பால்குடங்களை தலையில் தாங்கி வரும் பக்தர்களை பார்க்க கூடுகிற கண்களோ கோடிக்கணக்காகும்.விரதம் இருந்து பால்குடம்
எடுப்பவர்கள் முத்தாலம்மனை வணங்கி அங்குள்ள முத்து விநாயகரை சுற்றி வலம் வந்து, கொப்புடையம்மன் கோயில் பிரகாரம் சுற்றி, செகன்ட் பீட், செக்காலை ரோடு, கண்ணு பிள்ளை
தெரு, முத்தூரணி, முத்துப்பட்டணம் வழியாக மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் பிரகாரம் சுற்றி, கோயில் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து கொண்டு வந்த பாலை அம்மனுக்கு
நேரத்திக்கடனாக செலுத்துவார்கள்.
குழந்தை முதல் பெரியோர் வரை தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி தந்த தாய்க்கு பால்குடம் சுமந்து வந்து செல்லும் காட்சி பேரின்ப பெருக்கு. 10-ம் நாள் அம்மன் திருவீதி உலா, 11-ம் நாள் சந்தனகாப்பு அலங்காரம் என மண்டக படிதாரர்களால் நடத்தப்படுகிறது. ஊர் மகிழும் விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி - பங்குனி விழா 39 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு இந்நகர மக்கள் மோர், அன்னதானம், குளிர்பானம் வழங்குவதை பாக்கியமாக கருதுகின்றனர். இத்திருநாளில் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் நடப்பாண்டு விழா துவங்கி நடந்து வருகிறது.