மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த தென்திருப்பதியில் திருமலை ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம் உள்ளது. இங்கு ஐந்து நாள் தெப்போற்சவ வைபவம் விழா நடந்தது. முதல் நாள் ராமர் சீதா, லட்சுமணர் ஆஞ்சநேயருடன் திருவீதி உலா நடந்தது. இரண்டாம் நாள் ருக்மணி, ஆண்டாள் சமேதரராக நவநீத கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று நாட்களும் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்து, தெப்போற்சவ தேரில் எழுந்தருளினார். இவ்விழாவில் ஆனந்த நிலையம் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.