திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று (மார்ச்., 20ல்) விமரிசையாக நடந்தது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. நேற்று (மார்ச்., 20ல்) காலை 9:50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், சிறிய தேரில் சவுந்தரநாயகி அம்மனும் எழுந்தருளினர்.
பெரிய தேருக்கு முன்னதாக சண்டிகேஸ்வரர், விநாயகர் தேர்கள் புறப்பட்டன. பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்தை வரவேற்று பக்தர்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டிருந்தனர்.
காலை 9:50 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பிற்பகல் 12:20 மணிக்கு நிலையை வந்தடைந் தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்காக நீர்மோர் பந்தல் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.