அஞ்செழுத்து மந்திரமான நமசிவாயத்தை’பஞ்சாட்சரம்’ என்பர். இந்த மந்திரத்தை சிவ பெருமானே ஓதுகின்ற தலம் விருத்தாசலம். இத்தலத்திற்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திசைக்கு ஒன்றாக, இங்கு நான்கு ராஜகோபுரம், கோயிலுக்குள் ஒன்றுமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்து கொடி மரங்களிலும் கொடியேற்றுவர். இங்குள்ள ஐந்து நந்திகளும் வலது பக்கம் தலையைச்சாய்த்தபடி உள்ளன.மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் தீர்த்தங்கள் உள்ளன. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாத சர்மா, அவைர்த்தணி ஐந்து ரிஷிகள் சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றனர்.