பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
அன்னூர் : எல்லப்பாளையம் பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். எல்லப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பழநி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உணவுக்கூடம் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. இங்கு, கொங்கு வேளாளர்களில், ஆந்தை குலத்தவரின் குலதெய்வமான வீரமாச்சியம்மனுக்கு புதியதாக கோபுரத்துடன் கற்கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், கன்னிமார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா திருவிளக்கு வழிபாடுடன் மார்ச் 1ம் தேதி துவங்கியது. மார்ச் 2ம் தேதி காலை, காப்பு கட்டுதலும், திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு புறப்படுதலும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. மார்ச் 3ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை, இரவு இறைவன் திருவுருவங்களை பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாத்துதல், வாண வேடிக்கை நடந்தது. நேற்று அதிகாலை, வேள்விச்சாலையில் வைத்து சக்தியூட்டப்பட்ட திருக்குடங்கள் கோவிலை வலம் வந்தன. காலை 8.30 மணிக்கு செண்டை வாத்திய இசையுடன், வீரமாச்சியம்மன், பழனி ஆண்டவர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் ஆகியோர் விமானத்திலுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். வேள்விசாலையில் சக்தியூட்டப்பட்ட புனித நீர் கோவில் மேல்பகுதியிலிருந்து பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அன்னூர், அவிநாசி, சோமனூர், திருப்பூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பல ஆயிரம் பேர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேள்வி பூஜைகளை பேரூர் சாந்தலிங்கர் மன்றத்தினர் தமிழ்முறைப்படி செய்தனர். விழாவில் இன்னிசையுடன் திருமுறை பாடப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.