காரமடை அரங்கநாதர் கோவில் தேர் சீரமைக்கும் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 11:03
காரமடை : அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் ரூபாய் செலவில் தேர் அலங்காரம் மற்றும் சக்கரங்கள் பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன. காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது. அதற்காக தேர் சக்கரங்கள் பழுது பார்த்தல், அலங்காரம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியதும், தேர் அலங்காரம் செய்யும் பணிகள் துவங்கின. தேரில் உள்ள ஆறு சக்கரங்களையும் ஆய்வு செய்ததில், ஒரு சக்கரத்தில் உள்ள மரம் உடைந்திருந்தது. அச்சக்கரத்தை கழற்றி உடைந்த பகுதியை எடுத்து விட்டு, புதிய மரம் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேருக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன. கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் ஆறுமுகம், மேலாளர் ராமராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.