பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பழமையான கோவில்களில், ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. 200 ஆண்டு பழமையானது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு, இணையாக மார்கழி மாதத்தில் இக்கோவிலில் திருவிழா விமர்சையாக நடக்கும். போக்குவரத்துக்கு இடையூராகவும், கோவில் சிறியதாகவும் இருந்ததால், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திட, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 2005ல் கோவிலுக்கு அருகில், புதிய கோவில் அமைக்கும் பணிகள் துவங்கியது. புதிய கோவிலின் கும்பாபிஷேகம், 2012, மார்ச் 4ம் தேதி நடத்த முடிவு செய்து, கட்டுமானப் பணிகள் துவங்கியது. கோவில் பணிகள் முடிந்து, கடந்த 15ம் தேதி பழைய கோவில் இடிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கும்பாபிஷேகத்துக்காக கோவிலின் பின்புறம் பிரம்மாண்ட யாகசாலையும், சி.என்.சி., கல்லூரி மைதானத்தில் அன்னதான பந்தலும் அமைக்கப்பட்டது. ஃபிப்ரவரி 29 முதல் மார்ச் 3ம் தேதி வரை, கணபதி பூஜை, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, பிம்பசுத்தி, பிம்ப ரக்ஷாபந்தனமும், 4.30க்கு கலச புறப்பாடு, யாத்ராதானம் நடந்தது. அதிகாலை 6 மணிக்கு அனைத்து கோபுரத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார மூர்த்திகள் சகிதம் மாரியம்மனுக்கு மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. காலை பத்து மணிக்கு அபிஷேகம், விஷேச அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், துணை மேயர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர்.