பதிவு செய்த நாள்
08
ஏப்
2019
12:04
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 7ல்) நடந்த தீமிதி திருவிழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.
திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 21ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் அம்மன் ஊர்வலம், மதியம், மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் ஆகியவை நடந்து வந்தது.நேற்று (ஏப்., 7ல்), காலை, 10:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது.
தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பூ கரகத்துடன் ஊர்வலமாக அக்னி குண்டம் அருகே வந்து எழுந்தருளினார்.பின், 5,000க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, வாண வேடிக்கை மற்றும் இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (ஏப்.,8ல்), காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.