பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
02:04
குன்னூர்: குன்னூர் சுப்ரமணியர் சுவாமி கோவிலில், உளவார பணிகள் நடந்தன.பெருந்துறை, விஜயமங்கலத்தில் உள்ள கொங்குமண்டலம் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், குன்னூர் வி.பி., தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் உழவார பணிகள் நடந்தன. முட்புதர்கள் அகற்றப்பட்டன. கிணறு தூய்மைபடுத்தப்பட்டது. கருவறையில் உள்ள பூஜை பொருட்கள், அலங்கார பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கழுவி தூய்மை படுத்தப்பட்டது.அதில், சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இந்த பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து தமிழ் முறைப்படி வழிபாடு, ஞானவேள்வி, சொற்பொழிவு இடம் பெற்றது. சுவாமி சிலைகள் சுத்தம் செய்யபப்பட்டது. அனைவரும் தியானம் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டம் தலைவர் சொக்கலிங்கம் கூறிய தாவது:கடந்த, 1981 மே மாதத்தில் இருந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 456வது கோவிலாக இங்கு இந்த பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பணியாற்றுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இந்த குழுவில் உள்ளனர்.
கோவில் பணியை சிரமம் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நாவுக்கரசர் துவங்கிய இந்த உளவார பணி மாதம் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. ஜாதிமத பேதமின்றி அனைவரும் சமம் என்பதன் அடிப்படையில், அனைவரது வீடுகளில் தயார் செய்து கொண்டு வரும் உணவு, ஒன்றாக சேர்த்து கலந்து கூட்டு சோறு என மாற்றி அனைவருக்கும் அன்றைய தினம் வழங்கப்படுகிறது. கையிலே உழவாரம்; வாயிலே தேவாரம் என்ற கோஷமே எங்களின் அடிப்படை தத்துவம். வீடுகளை சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவதை போன்று பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு கோவிலையும் சுத்தமாக வைக்க பழகி கொள்ள வேண்டும். இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.