பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
03:04
ஊட்டி:ஊட்டியில், ஹெத்தையம்மன் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.ஊட்டியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர் திருவிழா கடந்த மாதத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஏப்., 15 ம் தேதி வரை உபயதாரர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் சார்பில் ஒவ்வொரு நாளும் தேர் ஊர்வலம் நடக்கிறது.இந்த ஊர்வலத்தில், ஆதிபராசக்தி, துர்கை, பராசக்தி, காமாட்சியம்மன், ராஜ ராஜேஸ்வரி, கருமாரியம்மன், மீனாட்சி அம்மன், பட்டதரசியம்மன், ஹெத்தையம்மன், சரஸ்வதி உட்பட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் மாரியம்மன் திருவீதி உலா நடக்கிறது.
நேற்று (ஏப்., 8ல்), நீலகிரியில் வாழும் படுகரின மக்கள் சார்பில், 50 வது ஆண்டு ஹெத்தைய ம்மன் திருதேர் ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ ஆடல், பாடலுடன் கோவில் வளாகத்தில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வழியாக மாலை, 6:30 மணிக்கு கோவில் வந்தடைந்தது.
விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாட்டு கச்சேரி, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் ஏப்., 16 மதியம், 1:55 மணிக்கு நடக்கிறது.