ஜெருசலேமை ஆண்ட சாலமன் ராஜாவின் அவைக்கு சீபா நாட்டு ராணி வந்தாள். ஏழு பெட்டிகளில் ரத்தினங்கள், தங்க நகைகள், விலை உயர்ந்த ஆடைகள், வாசனைத் திரவியங்களை பரிசாகக் கொண்டு வந்திருந்தாள். அப்போது அங்கு வந்த வியாபாரி ஒருவர்,“மகாராஜா! இந்தப் பொருட்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என ராஜாவிடம் கேட்டார். “நான் இவற்றை சுயநல நோக்குடன் பயன்படுத்த மாட்டேன். கடவுள் பணிக்காக செலவழிப்பேன்” என்றார். ராஜாவின் பெருந்தன்மையைக் கண்ட சீபா நாட்டு ராணி மகிழ்ந்தாள். சாலமனின் மதிநுட்பம் பற்றி கேள்விப்பட்டிருந்த அவள், அதை சோதிக்க விரும்பினாள். இரண்டு பூங்கொத்துக்களை கொடுத்து,“இவற்றில் எது இயற்கையானது; எது செயற்கையானது என்பதை கண்டுபிடியுங்கள்” என்றாள்.சாலமன் பதிலளிக்கவில்லை. “ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?” என்றாள். “மவுனத்திற்கு அதிக சக்தி உண்டு. நல்லது, கெட்டது என பகுத்தறியும் புத்தி இருந்தாலும் அதை மனிதர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் பூச்சிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். எந்தப் பூங்கொத்தின் நறுமணத்தை நுகர பூச்சிகள் வருகிறதோ அதுவே இயற்கையான பூங்கொத்து” என்றார். ராணி அவரது பதிலில் வியந்தாள்.