பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
05:04
உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், சித்திரை திருநாளையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சித்திரை முதல்நாள், வளம் பெருகவும், வாழ்க்கை செழிக்கவும், முக்கனிகளை வைத்தும், பொன் பொருள் வைத்தும் வரவேற்று வழிபடப்படுகிறது. உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களிலும், நேற்று (ஏப்., 14ல்) கனி தரிசனத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகருக்கு பழங்களிலான மாலை அணிவித்து, சந்தனக்காப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.சவுரிராஜ பெருமாள் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. நெல்லுக்கடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.குட்டைத்திடல் விநாயகர் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வ.உ.சி.,வீதி பெருமாள் கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள், திரளாக சென்று இறைவழிபாட்டுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
மடத்துக்குளம் சித்திரை திருநாளை முன்னிட்டு மடத்துக்குளம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவில், கணியூர் ஐயப்பன் கோவில், கடத்தூர், சோழமாதேவி, கொமரலிங்கம் கொழுமம் ஆகிய இடங்களிலுள்ள அர்ச்சுனேசுவரர், குங்கும வல்லி உடனமர் குலசேகரசாமி, லட்சுமி நாராயண பெருமாள்கோவில், காசிவிஸ்வநாதர், தாண்டேசுவரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர்.