பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
கோத்தகிரி:கோத்தகிரி மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று (ஏப்., 21ல்) அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவின், ஒவ்வொரு நாளும் காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார வழிபாடும், பகல் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழாவில், கோத்தகிரி பகுதியில், பல்வேறு உபயதாரர்களின் சார்பில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு கட்டமாக, நேற்று (ஏப்., 21ல்) காலை 11:00 மணிக்கு, அபிஷேகம் அலங்கார வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு, மாரியம்மனின் துணை கோவிலான, குன்னூர் சாலையில் அமைந்துள்ள கன்னிமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில்,நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜையை அடுத்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (ஏப்., 21ல்) காலை 9:00 மணிக்கு, மாரியம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு, அபிஷேக பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 6:00 மணிக்கு, மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.