ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயிலுக்குள் 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். சில ஆண்டுக்கு முன்பு தனியார் லாட்ஜ், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அக்னி தீர்த்தத்தில் கலந்ததால் கடல் நீர் மாசடைந்தது, பக்தருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இந்நிலையில் கழிவு நீரை சுத்திகரித்து அக்னி தீர்த்தத்தில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் கடலில் நகராட்சி நிர்வாகம் வெளியேற்றியது.
மேலும் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தீர்த்த கரையில் குவியும் பக்தர்களின் கழிவு துணிகள், பாசிகளை தினமும் அகற்றி சுத்தம் செய்தனர்.கடந்த இரு தினங்களாக அக்னி தீர்த்த கடற்கரையில் சுத்தம் செய்யாமல் கடல் பாசிகள் குவிந்ததால், துர்நாற்றம் வீசியது. தங்களது பாவங்களை தீர்ப்பதற்காக வெளி நாடுகள், மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடலில் நீராடிட வருகைதருகின்றனர். தீர்த்தம் கடற்கரை அருவெருப்பாக இருந்ததால் பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடி சென்றனர். ராமேஸ்வரம் நகராட்சியில் 130 துப்புரவு ஊழியர்கள் இருந்தும், அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்வதில் நகராட்சி அலட்சியம் காட்டி வருகிறது.இதன் காரணமாக தீர்த்தம் மாசடைந்து வருகிறது. அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்து பராமரிக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட வேண்டும்.