பதிவு செய்த நாள்
02
மே
2019
01:05
சூலுார்:காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி, அம்மன் திருவீதி உலா நேற்று நடந்தது.
சூலுார், கலங்கல் ரோடு, காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த, ஏப்., 16ம் தேதி இரவு, பண்டிகை சாட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. 23 ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. அன்றாடம் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர்.28ம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடந்தன.நேற்று காலை, 10:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து அம்மன் அழைத்தல் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பெண்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்றாடம் மதியம் மற்றும் இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன. அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.