பதிவு செய்த நாள்
11
மே
2019
01:05
திருவனந்தபுரம்: திருச்சூர் பூரம் விழாவில், ’ராமச்சந்திரன்’ யானை பங்கேற்க விதிக்கப்பட்டு உள்ள தடை விவகாரத்தில் தலையிட, கேரள உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருச்சூரில், ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். விழாவின் சிறப்பு அம்சமாக, யானைகள் அணிவகுப்பு நடத்தப்படும்.
யானைகள் அணிவகுப்புக்கு, 10.5 அடி உயரம் உள்ள, 54 வயதான, ‘ராமச்சந்திரன்’ என்ற பிரமாண்ட யானை, தலைமை வகித்து, மற்ற யானைகளை வழி நடத்திச் செல்லும். இந்த பிரமாண்ட யானையை காண, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
இந்த ஆண்டு, பூரம் திருவிழா, வரும் 13 மற்றும் 14 தேதிகளில் நடக்கிறது. ராமச்சந்திரன் யானை, கடந்த பிப்ரவரியில், குருவாயூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, இரண்டு பேரை மிதித்து கொன்று விட்டது. பார்வை குறைபாடு: கடந்த ஓராண்டில் மட்டும் ராமச்சந்திரன் யானை, 13 பேரை மிதித்து கொன்று விட்டதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பார்வை குறைபாட்டால் யானை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பூரம் விழாவில், பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்டு, யானை மிரண்டால், பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறி, அவ்விழாவில் பங்கேற்க, ராமச்சந்திரன் யானைக்கு, மாநில அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூரம் விழாவுக்கு யானைகளை அழைத்துச் செல்வதில்லை என, யானை உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். கேள்விக்குறி: இதையடுத்து, யானை உரிமையாளர்களுடன், கேரள தேவசம் போர்டு அமைச்சர், சுரேந்திரன், பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன், ராமசந்திரன் யானையை, 45 நிமிடம் மட்டும் அழைத்துச் செல்ல அனுமதியளிப்பதாக, சுரேந்திரன் தெரிவித்தார். அரசின் முடிவை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில், யானை உரிமையாளர்கள், மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று (மே., 10ல்) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரத்தில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. திருச்சூர் மாவட்ட கலெக்டரே, ராமச்சந்திரன் யானை பங்கேற்பது பற்றி முடிவு செய்யட்டும்’ என, நீதிபதிகள் அறிவித்தனர். இதனால், திருச்சூர் பூரம் விழாவில், யானைகள் அணிவகுப்பு நடப்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.