பதிவு செய்த நாள்
11
மே
2019
12:05
வீரபாண்டி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க நேற்று (மே., 10ல்) மாலை கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஏப்ரல் 17ல் திருக்கம்பம் நடப்பட்டது. மே 7ல் அம்மன் மலர் விமான வீதி உலா, மே 9ல் புஷ்ப பல்லக்கு, சிறப்பு பூஜைகள், மண்டகப்படி பூஜைகள் நடந்தன.
திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நேற்று (மே., 10ல்) மாலை 3:45 மணிக்கு துவங்கியது. முதலில் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து தேருக்கு சக்தி கொடுத்தல் நிகழ்வும், பின், திருத்தேர் வடம் பிடித்தல் மாலை 5:00 மணிக்கு நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ், டி.ஆர்.ஓ., கந்தசாமி, அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இன்று (மே., 11ல்) தெற்கு ரத வீதி திருத்தேர் வடம் பிடித்தலும், நாளை (மே., 12ல்) மேற்கு ரத வீதியில் வடம் பிடித்து நிலை பெறுதலும், அதனைத் தொடர்ந்து அம்பாள் திருத்தேர் தடம் பார்க்கும் வைபவமும் நடக்க உள்ளது. ஏற்கனவே 781 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 80 போலீசார் கூடுதல் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.