பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வைகாசி விசாகத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள
அர்த்தநாரீஸ்வரர், நகருக்கு எழுந்தருளி, திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா, நேற்று (மே., 10ல்) துவங்கியது.
அர்த்தநாரீஸ்வரர்,செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கலச பூஜை செய்த சிவாச்சாரியர்கள், கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும்
மலர்கள் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர். வரும், 13ல் திருமலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு கொடியேற்றம், மதியம், 1:45க்கு பரிவாரங்கள் புடைசூழ திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல், இரவு, 8:30க்கு நாலுகால் மண்டபத்தில்
தீபாராதனை, இரவு, 10:00 முதல், அதிகாலை, 4:00 வரை நான்கு ரத வீதியுலா நடக்கிறது. வரும், 18 அதிகாலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம், காலை, 10:45க்கு மேல்
பவுர்ணமி திதி விசாக நட்சத்திரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், 11:30 மணியளவில் விநாயகர் திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
மே, 19 ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர், அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல்; 21 மாலை ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல்; 23ல்,
அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கைலாசநாதர் கோவிலில் இருந்து எழுந்தருளி திருமலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றம், கவியரங்கு, வழக்காடு மன்றங்கள் நடக்கவுள்ளன.