பதிவு செய்த நாள்
16
மே
2019
02:05
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பெருவிழாவின் பிரதான நாளான நேற்று (மே., 15ல்), தேர் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன், தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.
வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் பிரதான நாளான நேற்று (மே., 15ல்), தேர் திருவிழா நடந்தது.நேற்று (மே., 15ல்)அதிகாலை, உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.காலை, 9:45 மணிக்கு, அரோகரா கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்தனர். மாடவீதிகளை வலம் வந்த தேர், பின்னர் நிலைக்கு வந்தது. நேற்று (மே., 15ல்) இரவு, ஒய்யாளி உற்சவம் நடந்தது. வடபழனி முருகன் திருவீதி உலா, 17ம் தேதியும், அடுத்த நாள், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், துணை கமிஷனர், கே.சித்ராதேவி ஆகியோர் செய்திருந்தனர்.