பதிவு செய்த நாள்
17
மே
2019
12:05
மேட்டுப்பாளையம்:சிறுமுகை கிச்சகத்தியூரில் புதிதாக ஸ்ரீ விருட்ச பீடமும், 27 நட்சத்திர அதி தேவதை சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டன.
மேட்டுப்பாளையத்தை அடுத்து சிறுமுகை அருகே உள்ளது கிச்சகத்தியூர். இங்கு விருட்சபீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு, 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவதைகளுக்கான, கும்பாபிஷேக விழா நான்கு கால பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, 7:45 மணிக்கு துவங்கியது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர அடிகள், அவினாசி காமாட்சி தாச அடிகள், தர்மராஜா அருள் பீடம் கிருஷ்ணமூர்த்தி அடிகள் ஆகியோர், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஸ்ரீ விருட்ச பீடம் நிறுவனர் லட்சுமிதாச சுவாமி கூறுகையில்,உலகில் பிறந்த மனிதர்கள் அவரவர் செய்த பாவ, புண்ணியம் என்ற கர்மவிணைப் பயனாக வாழ்வில் இன்ப, துன்பங்களை பெற்று வாழ்ந்து இறுதியில் இறைவனுக்குள் ஆன்மா ஒடுங்குகிறது. பாவ வழியில் வாழ்ந்து மடியும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுத்து, செய்த பாவ வினைகளுக்கு உண்டான பலன்களை அனுபவிக்க நேர்கிறது. இதனை கர்மவினை என்கிறோம். இதை வழிபாடுகள் மூலம் நீக்கும் இடமே ஸ்ரீ விருட்ச பீடம். இங்கு, 27 நட்சத்திர அதி தேவதைகள் சிலை நிறுவப்பட்டுள்ளன, என்றார்.தொழிலதிபர் ஆறுமுகசாமி முன்னிலையில், விழாக் குழுவினர் கும்பாபிஷேக வேள்வி வழிபாடுகளை நடத்தினர். பக்தர்களுக்கு மரக்கன்றுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மூலிகை கண்காட்சியும், பட்டிமன்றமும் நடந்தது.