நிஜமான பக்தனுக்கு அவனுடைய திட்டமிடுதலை விட, ஆண்டவர் நடத்தும் திட்டமிடுதலே பல மடங்கு பலனைத் தருகிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்ட ஒரு பெரியவர் தன் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க விரும்பினார்.
லட்சக்கணக்கில் மகன் சம்பாதிக்க ஆசைப் பட்டார். ஆனால், அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. நொந்து போன பெரியவர், வேறு வழியின்றி மகனை மற்றொரு படிப்பில் சேர்த்துவிட்டார். நன்கு படித்த அந்த மாணவன் ஆடிட்டராகி விட்டான். இப்போது பல பெரிய தொழில் நிறுவனங்கள் அவனைத் தேடி வருகின்றன. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தான் வேலை செய்வான். டாக்டருக்கு கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம். பணிநேரமும் குறைவு. இப்போது பெரியவர் கர்த்தரிடம் ஜெபித்தார். “கர்த்தரே! நான் ஒன்று நினைக்க நீர் வேறு மாதிரியாக முடிவு செய்திருக்கிறீர். இவன் மருத்துவராகி இருந்தால், இரவும், பகலும் சிரமப்பட்டிருந்தாலும் கூட இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. எல்லாம் உம் கருணை யினாலும், நான் உம் மீது கொண்ட விசுவாசத்தாலும் வந்தது,” என்றார். “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம். ஆனாலும், கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்,” என்கிறது பைபிள்.