சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை நாளை பதினோராம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2012 11:03
தர்மம் இருக்குமிடத்தில் தான் கடவுள் இருப்பார், என்கிறார் சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமிகள். தர்மத்தை நிலைநாட்டி தீமையை அழிக்க பகவான் எடுத்த அவதாரங்களில் மிக உயர்ந்தது கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் குழந்தைப் பருவம் முதலே அதிசயிக்கும் வகையில் பல லீலாவிநோதங்களைச் செய்து நம்மை மகிழ்வித்தார். பிறந்தவுடன் தாய்க்கு விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாலகிருஷ்ணராக இருந்தபோதே பூதனையை வதம் செய்து மோட்சம் கொடுத்தார். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்களின் பக்கம் இருந்து ஆலோசனை வழங்கினார். தர்மம் இருக்கும் இடத்தில் தான் கடவுள் இருப்பார் என்பதையும், தர்மமே கடைசியில் வெல்லும் என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டினார். பாண்டவர்கள் சிரமப்படும் போதெல்லாம் அவர்களுக்கு துணையாக இருந்து, மனவுறுதி அளித்து காப்பாற்றினார். நண்பரான அர்ஜுனனுக்குப் போரிடும் வலிமையை ஏற்படுத்துவதற்காக வேதாந்த சாரமான பகவத்கீதையை உபதேசித்தார். கிருஷ்ணர் கோபிகைகள் பலருடன் கூட இருந்து விளையாடியதை வெறும் உலகியல் நோக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ராமாவதாரத்தில் வனவாசம் சென்ற ராமனை தரிசித்த ரிஷிகள் அவரோடு பழக ஆசைகொண்டனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பதாக அவரும் வாக்குறுதி அளித்தார். இதற்காகவே, பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, தவரிஷிகள் அனைவரும் ஆயர்பாடியில் கோபிகைகளாகப் பிறந்து வளர்ந்தனர். அவர்களோடு பழகவும், விளையாடவும், அன்புடன் ஆராதிக்கவும் வாய்ப்பளித்தார். இதையே ஸ்ரீமத் பாகவதம் எடுத்துச் சொல்கிறது. அவர் அர்ஜுனருக்கு உபதேசித்த கீதோபதேசத்தை உணர்ந்து பின்பற்ற வேண்டும். பசுக்களை மேய்க்கப் பிரம்பேந்தும் அப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் செல்வவளம் பெருகும். அஞ்ஞானம் அகன்று நல்லறிவு உண்டாகும். பகவத்கீதை என்னும் பேரமுதம் பருகினால் வாழ்வு மேன்மை பெறும். நாளை(மார்ச்16) சிருங்கேரி சுவாமி, ஈரோடு, பெருந்துறை ரோடு சக்திதுரைசாமி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். போன்: 94430 26585.