பதிவு செய்த நாள்
05
ஜூன்
2019
02:06
ரம்ஜான் மாதத்தில் செய்யக்கூடிய நற்செயல்களில் இஅதிகாப் முக்கியமான வணக்க வழிபாடு. இது இறைவனுக்கு பிடித்த செயல். நபிகள் நாயகம் தன் வாழ்வின் கடைசி காலம் வரை இதை கடைப்பிடித்தார்.
ரம்ஜான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஅதிகாப் இருப்பர். மசூதியில் தங்கியிருந்து தனக்கென மறைப்பு கட்டி இரவு முழுதும் கண் விழித்து வணக்க வழிபாடுகளில்
ஈடுபடுவார்.
இரவு, பகல் பாராமல் தொழுவது, குர் - ஆன் ஓதுவது, ஜிகிர் செய்தல் என்று பத்து நாட்களும் மசூதியில் கழியும். இஅதிகாப் என்றால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று பொருள். உலக வாழ்விலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்து இறைவனுக்காக பிரார்த்தனைகளிலேயே
முழுமையாக ஈடுபடுவது.
ஆண்கள் அவர்கள் இருக்கும் பகுதி மசூதிகளில் இஅதிகாப் இருக்க வேண்டும். பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கலாம். ஆண்டு முழுவதும் படைப்பினங்களிடம் கொண்டிருந்த நெருக்கத்தை இஅதிகாப் இருப்பதின் மூலம் இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இறைவனுடன் உள்ளம் ஒன்றி விடுவதற்கும் மேலும் அவன் இல்லாத நினைவுகளை உள்ளத்தில் இருந்து அகற்றி கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.
வாழ்க்கை இஅதிகாப் இருக்கும் சமயம், அவசியத் தேவையின்றி பிறரிடம் பேசக் கூடாது. மசூதியை விட்டு வெளியே வரக் கூடாது. அதிகம் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
கழிப்பறைக்கு செல்ல குளிக்க மட்டுமே மசூதியின் உள்பகுதியிலிருந்து வெளியே வரலாம்.
இஅதிகாப் இருக்கும் அந்த பத்து நாட்களில் இறைவனிடம் கேட்டுப் பாருங்கள்; கேட்டு பெறுங்கள்.
கேட்டதும் கிடைக்கும்; கேட்காததும் கிடைக்கும். ஆனால் நிச்சயமாக வெறுங்கையுடன் அனுப்ப மாட்டான். இது எண்ணற்றோரின் அனுபவம். வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள். இறைவன் இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ சோதனைகளை
ஏற்படுத்துகிறான். ஒரே ஒருமுறை இஅதிகாப் இருந்து இறைவனை சோதித்துப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள். வீட்டை விட்டு பத்து நாட்கள் மசூதியில் தங்கிக் கொண்டால் குடும்ப தேவைகள் எப்படி பூர்த்தியாகும் என்கிற கேள்வி, சிலரின் மனதில் எழலாம்.
எந்த பறவையாவது தன் உணவை சுமந்து செல்கிறதா... என்று இறைவன் கேட்கிறான்.
மனிதன் மட்டுமே உணவை டிபன் பாக்ஸில் வைத்து அலைந்து கொண்டிருக்கிறான். மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் தங்கள் உணவை தேடி பறக்கும் பறவைகள் எத்தனை! அவற்றுக்கும் உணவை இறைவன் தான் தருகின்றான்.
இரவில், மரத்தில் படுக்கும் எந்த பறவையாவது தூக்கத்தில் கீழே விழுகிறதா... அதற்கு பாதுகாப்பும் இறைவன் தானே தருகிறான்.
உலகின் பல்வேறு தேசங்களிலிருந்து வேடந்தாங்கலுக்கு பறவைகள் வந்து சேர்கிறதே...
விமானத்திலா அவை வருகின்றன? அவைகளுக்கு விலாசம் சொன்னது யார்? வழிகாட்டியாக
இருப்பவன் யார்?
பறவைகளுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் மனிதர்களுக்கு இல்லை? பறவைகள் அடுத்த வேளை உணவைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன. மனிதன் தான், அடுத்த தலைமுறைக்கும், உணவை சேர்த்து வைக்க போராடுகிறான்.
ஐந்தறிவு கடலை எடுத்துக் கொள்ளுங்கள்... எத்தனை வித கடல் பிராணிகள்! மீன்கள், இறா, நண்டு என்று பலவகை. தண்ணீருக்குள் இருக்கும் இவற்றுக்கும், உணவை தருபவன் இறைவன்.
புலிகளும், சிங்கங்களும், கரடிகளும், யானைகளும் காடுகளில் ஏராளமான எண்ணிக்கையில் வசிக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று பசியினால் இறந்துதுண்டா? இந்த விலங்குகள் தங்கள் உணவுக்காக யாரிடமாவது கையேந்தியதுண்டா? நோய் வாய்ப்பட்டு காட்டை விட்டு
மிருக வைத்திய டாக்டரை பார்க்க வருகிறதா?
இந்த விலங்குகளும் கர்ப்பம் தரித்து குட்டி பிறக்கிறதே! இவையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனவா அல்லது சிசேரியன் நடக்கிறதா? உணவுக்காக ரேஷன் கார்டை நம்பி உள்ளனவா? எதுவுமே இல்லையே!
தங்களுடைய இடத்தில் இவை நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கின்றன. இத்தனைக்கும் இவற்றுக்கு ஐந்தறிவு தான்.
ஆறு அறிவு படைத்த மனிதனிடம் சிக்கிக் கொண்ட விலங்குகள் தான், படாத பாடு படுகின்றன. விலங்குகளுக்கு இருக்கும் நம்பிக்கை கூட மனிதனுக்கு ஏன் இல்லை?
அதற்கு முக்கியமான காரணம் எதற்காக நாம் படைக்கப்பட்டோம் என்கிற முக்கியமான விஷயத்தை மனிதர்களாகிய நாம் மறந்து போனதே! அதை நாம் புரிந்து கொண்டால் உணவுக்குப் பின்னால் காலம் முழுக்க ஓடுவதை விட்டு இறைவனுக்காக நம் நேரத்தை கொடுக்க தயார் ஆவோம்!
*புத்திசாலி மனிதர் யார்
இன்று ஈகை திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களான கலிமா, தொழுகை, நோன்பு, ஜிகாத், ஹஜ் ஆகியவற்றில் நோன்பு வைப்பது ஜிகாத் கொடுப்பது ஆகியவற்றை இந்த ரம்ஜான் மாதத்தில் செய்கிறோம். இறை வேதமான குர் - ஆன் இறங்கியதும் இந்த ரம்ஜான் மாதத்தில் தான்!
உங்களுக்கு முன் இருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. நோன்பு வைப்பதின் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக மாறுவீர்கள் என்று குர் - ஆன் தெளிவாக கூறுகிறது.
உண்ணுங்கள்; பருகுங்கள். உணவையும், தண்ணீரையும் வீண் விரயம் செய்யாதீர்கள் என்கிறான் இறைவன். இறைவன் சொன்னதை நாம் வருடத்தின் பதினொரு மாதம்
பின்பற்றுகிறோம்.
ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை உண்ணாதீர்கள், பருகாதீர்கள் என்று இறைவன் சொன்னபடி கடைபிடிக்கிறோம்.
நோன்பு வைக்கும் சமயத்தில் கடுமையான பசி ஏற்படுகிறது. தீராத தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆனால் நாம் அவற்றை அருந்துகிறோமா... இல்லை; ஏன் என்றால் இறைவன்
நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம், நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இறை நேசர் ஒருவர் இருந்தார். அவர் தன் சீடனிடம் ஒரு கோழியை கொடுத்து இதை யாரும் பார்க்காத மாதிரி அறுத்து உரித்து வா என்றார். காலையில் சென்ற சீடன், மாலையில் திரும்பினான். அவன் கையில் கோழி உயிருடன் இருந்தது.
என்ன விஷயம்? என்றார் இறைநேசர்.யாரும் பார்க்காத மாதிரி பல இடங்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றான் சீடன்.
சபாஷ் நீ சத்தியத்தை அறிந்து விட்டாய்... என்றார் இறைநேசர்.
இன்னொரு சம்பவம்...
ஒரு பெரியவர் நோன்பு சமயத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த சில இளைஞர்கள் அவரை கிண்டல் செய்தனர்.
பெரியவரே நீங்க நோன்பு வைக்கவில்லையா... என்றனர்.
நான் நோன்பு வைத்திருக்கிறேன்...எப்படி... என்று இளைஞர்கள் வியந்தனர்.
நான் பொய் சொல்வதில்லை, திருடுவதில்லை; யார் மீதும் பொறாமை கொள்வதில்லை; எதன் மீதும் பேராசை இல்லை. மற்றவர்களுக்கு சிரமம் தரும்படி வாழ்வதில்லை; யாரும் மனம் புண்படும்படி பேசுவதில்லை. மற்றவர்கள் இல்லாத சமயங்களில் அவர்களின் குறைகளை
பலவீனங்களை சொல்லித் திரிவதில்லை.
மது அருந்துவதில்லை. மனைவியை தவிர மற்ற பெண்களை பார்ப்பதில்லை. வட்டிக்கு பணம் வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை என்ற பெரியவர், நீங்கள் நோன்பு வைத்திருக்கிறீர்களா... என்று, இளைஞர்களை பார்த்துக் கேட்டார்.
இளைஞர்கள் தலை குனிந்தனர்.நோன்பு நேரத்தில் தவிர்க்க வேண்டியது வெறும்
உணவைத்தான் என்கிற அறியாமைக்கு, இந்த சம்பவம் ஒரு சவுக்கடி.
உலகம் எங்கும் அன்பும், அமைதியும், ஒற்றுமையும்,நிம்மதியும், மகிழ்ச்சியும் பரவட்டும். ஆமின்!
*பிறர் கண்ணீரை விரல் தொலை தூரம் வரை
துயர மழை அடிக்கும்.
உன் அருள் இருந்தால்
மனமும் குடை பிடிக்கும்.
உறவுகள் விலகிச் செல்ல
உணர்வுகள் கதறி துடிக்கும்.
உன் துணை இருந்தால்
உடனே விடை கிடைக்கும்.
இன்று பெருநாள் அன்று
நெஞ்சின் இருள் விலகி
மகிழ்வை பகிர்ந்தளித்து
பிறர் கண்ணீரை விரல் துடைக்கும்.
ஜலடைக்கார் பைஸல் அஹ்மத்