பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
12:06
திண்டுக்கல்: ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் - மதுரை ரோடு பெரிய பள்ளிவாசலில் நேற்று (ஜூன்., 5ல்)காலை சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை நிறைவுற்றதும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
நாகல்நகர், ரவுண்ட்ரோடு, செல்லாண்டியம்மன்கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
* பழநி: பழநியில் திருநகர், சின்ன பள்ளிவாசல், பெரியபள்ளி வாசலைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காந்திரோடு, மாரியம்மன்கோயில் ரோடு, காரமடை வழியாக ஊர்வலமாக சென்றனர். பின், சண்முகாநதி கொத்தவா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். லட்சுமிபுரம், பாண்டியன்நகர், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
* கன்னிவாடி: கன்னிவாடி, சித்தையன்கோட்டை பகுதி பள்ளி வாசல்களில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது. பின்பு நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை
முடிந்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
* வத்தலக்குண்டு: வத்தலகுண்டில் பெரிய பள்ளிவாசல், காந்திநகர், சொசைட்டி தெரு ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இளைஞர்கள் கணவாய்ப்பட்டி ரோட்டில் தனியார் இடத்தில் தொழுகை நடத்தினர். ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகை முடிந்த பின் திடீரென ஊர்வலமாகச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் போலீசார் கேட்டுக்கொண்டதால் கலைந்து சென்றனர்.