பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
01:06
சேலம்: பள்ளி வாசல்களில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில், திரளானோர் பங்கேற்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஜாமியா மஜித்தில், முத்தவல்லி அன்வர், கோட்டை மேலத்தெரு பள்ளிவாசலில், முத்தவல்லி நாசர்கான் தலைமையில், நேற்று (ஜூன்., 5ல்) காலை, 9:00 முதல், 10:00 மணி வரை சிறப்பு தொழுகை நடந்தது.
அதில், கோட்டை, டவுன், முகம்மது புறா பகுதியைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளப்பட்டி ஈத்கா, புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, சூரமங்கலம், மூன்று ரோடு, லைன்மேடு, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை உள்பட, மாநகரில், 30 இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில், திரளானோர் பங்கேற்று தொழுதனர். அதேபோல், ஓமலூர், ஆத்தூர்,
இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி உள்பட, புறநகரில், 33 பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள், தொழுகையை
முடித்து, தங்களுக்குள் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
ஊர்வலம்: ஓமலூர், ஜாமியா மசூதியிலிருந்து, திரளான முஸ்லிம்கள், காலை, 9:00 மணிக்கு, ஊர்வலமாக புறப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் வழியாக, தாலுகா அலுவலகம் சாலை சென்று,
ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு, முத்தவல்லி அஜீஸ் தலைமையில், சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.