பதிவு செய்த நாள்
16
மார்
2012
11:03
திருத்தணி :சோளீஸ்வரர் கோவிலில், மூன்று நாட்கள் சூர்ய பூஜையும், இன்று 1,008 பால்குட அபிஷேகமும் நடக்கிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆற்காடுகுப்பம் கிராமத்தில், சோளீஸ்வரர் உடனுறை காமாட்சியம்மாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதம் முதல் மூன்று நாட்கள் சூர்ய பூஜை கொண்டாடப்படுகிறது. அதே போல், இந்தாண்டிற்கான சூர்ய பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் காலை 6.05 மணிக்கு சூர்யனின் ஒளிகதிர்கள் சிவலிங்கத்தின் சிரசு (தலை) மீது விழுந்தது. இரண்டாம் நாளான நேற்று, காலை சூர்ய ஒளி லிங்கத்தின் மையப் பகுதியில் (தொப்புள்) விழுந்தது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று காலை 6.05 மணிக்கு (3ம் நாள்) லிங்கத்தின் பாதத்தில் ஒளி விழும். இதையடுத்து காலை 8 மணிக்கு, 1,008 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மாலை 5 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.