கடலூர் :கடலூர் புதுப்பாளையத்தில் கோவில் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் புதுப்பாளையம், அப்பாவு தெருவில் உள்ளது முத்தாலம்மன் கோவில். இந்த கோவிலின் பின் புகுதியில் சண்முக ராஜா என்பவர் ஆக்கிரமித்து கொட்டகை போட்டு டிங்கர் பணி செய்து வந்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வழிபடுவோர் சங்கம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கீழ்கோர்ட்டில் வழிபடுவோர் சங்கத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் சண்முகராஜா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதை எதிர்த்து வழிபடுவோர் சங்கம் வழக்கு நடத்த முடியாது என்பதால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கோவில் குருக்கள் மோகனசுந்தர்சிவம் மற்றும் பக்தகர்கள் நேற்று காலை கோவில் விரிவாக்கத்திற்காக, சண்முகராஜா ஆக்கிரமித்திருந்த இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜா, குருக்களை நெட்டித்தள்ளி தாக்கினார். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கோவில் குருக்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து இருதரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.