பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
02:06
சேலம்: கோவில் வழிபாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பக்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சேலம் மாவட்டம், மேச்சேரி சிறப்புநிலை பேரூராட்சி பொதுமக்கள், நேற்று (ஜூன்., 10ல்)கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: பேரூராட்சி, 10வது வார்டு சின்னகிணறு பகுதியில், கிணறுடன் கூடிய, 12.5 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.
மேட்டூர் அணை கட்ட கடந்த, 1932க்கு முன், நிலம் கொடுத்த பொம்மசந்திரம் கிராமத்தினர், புலம் பெயர்க்கப்பட்டு, மறுகுடியேற்றம் செய்ய கிணறுடன் கூடிய நிலம் வழங்கப்பட்டது. தற்போது, பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிலம், கிணற்றை, அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பக்தர்கள் பராமரித்து வருகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் பூவாரி கொட்டுதல், சக்தி கரகம் அழைத்தல், கம்பம் நடுதல், சாமுண்டி அழைத்தல், தவசுமரம் பூஜை, மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து காலம்காலமாக வழிபாடு நடத்தி வந்தனர்.
அப்பகுதியில் வசிக்கும் நால்வர் கும்பல், வழிபாட்டு நிலத்தை ஆக்கிரமித்து, கிணற்றையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், ஊருக்குள் மோதல்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. நால்வருக்கு, எதிராக ஊரே திரளும் நிலை ஏற்பட்டுள்ளதால், கோவில் வழிபாட்டு நிலத்தை மீட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.