’உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்?’ என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?” இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள்.
“தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை ஏற்படுகிறது?” என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? “என்னை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,” என்பார்.
இது நிஜம் தானே! விதிகளை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவரும் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, களவு செய்யாதே... என்றெல்லாம் எடுத்துச் சொல்லியுள்ளார். சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா என்றால், அவும் இல்லை. இன்ன காரியங்களைத் தவிர்த்தால் சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைத்தும் கெடுக்கிறோம். பின், கஷ்டம் வரத் தானே செய்யும்!
பைபிளில் ஒரு வசனம், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமும் உள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது” என்கிறது. உடலில் உண்மைத்தன்மை இதில் வெளிப்படுகிறது. உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறோம் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. இனியேனும் செய்த பாவங்களை உணர்ந்து, ஆண்டவரிடம் பாவமன்னிப்பு பெற்று துன்பங்களில் இருந்து விடுபடுவோம்.